தொலைத்தொடர்பு கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் தீர்மானித்ததன் மூலம், பாடசாலை மாணவர்களின் இணையவழிக் கல்வியும் தடைபடலாம் கூறப்படுகின்றது.
இதனை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காரணம்
எதிர்வரும் மாதத்தில் இருந்து தொலைபேசி கட்டணங்கள் அநியாயமாக அதிகரிக்கப்படுவதால், இணையவழி கல்வியில் ஈடுபடும் பிள்ளைகள் மற்றும் கற்பிக்கும் ஆசிரியர்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த முடிவால் தொலைபேசி கட்டணம் மற்றும் இணைய கட்டணங்கள் தாங்க முடியாத அளவிற்கு உயரும் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக, பள்ளி மாணவர்களிடையே 35% கணினி கல்வியறிவு இருந்தபோதிலும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆன்லைன் கல்வி தொடங்கிய பின்னர் அந்த சதவீதம் அதிகரித்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் தொலைபேசி மற்றும் இணையக் கட்டணங்கள் அதிகரிப்பதால் இணையவழிக் கல்வி நடவடிக்கைகளில் இருந்து சிறுவர்கள் ஒதுக்கப்படும் அபாயம் இருப்பதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒப்பீட்டளவில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் சாதனங்களின் விலை அதிகரித்துள்ளதாகவும், அதனால் இந்நிலை மேலும் மோசமாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் அவர்களின் பிழைப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாது பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் பள்ளிப் பேருந்துகள், வேன்கள் போன்றவற்றின் விலையும் செருப்பு, புத்தகங்கள் போன்ற எழுதுபொருட்களின் விலையும் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.