தென் மாகாணத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு அக்குரஸ்ஸ, தெனியாய, முலட்டியான மற்றும் வலஸ்முல்ல பிரதேச பாடசாலைகளை மூடுவதற்கு பிராந்திய கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடும் மழை காரணமாக கிரிலிப்பனவில் இருந்து மாத்தறை – கொட்டபால வீதி தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிரிலிப்பன பகுதியிலிருந்து செல்லும் பாதை மண்சரிவு காரணமாக தடைப்பட்டுள்ளதாகவும், சிறிய வாகனம் கூட அந்த பகுதியினூடாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொரவக – நெலுவ வீதியும் தடைப்பட்டுள்ளதுடன், கிரம ஓயா பெருக்கெடுத்து ஓடுவதால், பிடபத்தர பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதேவேளை, நில்வலா ஆற்றின் மேல் மற்றும் நடுப்பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த 3 முதல் 24 மணித்தியாலங்களில் பின்வரும் பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.
கொட்டபொல, பிடபெத்தர, பஸ்கொட, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் நில்வலா கங்கை கசிவுப் பாதைக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும்.
இது தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.