தென்கொரிய விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் பறவைமோதலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தென்கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தென்கொரிய வரலாற்றில் மிக மோசமான விமானவிபத்திற்கான காரணங்கள் குறித்த விசாரணைகளின் போது இது தெரியவந்துள்ளதாக தென்கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முயான் சர்வதேச விமானநிலையத்தின் கட்டுப்பாட்டு கோபுரத்திலிருந்து ஜெசுஎயர் 7சி 2216 விமானத்திற்கு பறவை தாக்கலாம் என்ற எச்சரிக்கை அனுப்பப்பட்டது.
சற்று நிமிடத்தில் விமானி ஆபத்திலிருப்பதற்கான சமிக்ஞையை அனுப்பினார் என தென்கொரியாவின் நிலம் உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சகத்தின் விமானப்போக்குவரத்து கொள்கை இயக்குநர் ஜீ – ஜாங்- வான் தெரிவித்துள்ளார்.
காலை 9.30 மணியளவில் விமானி தரையிறங்குவதற்கான கியரை பயன்படுத்தாமல் தரையிறங்க முயன்றார் இதனால் ஓடுபாதையை தாண்டிச்சென்று சுற்றுமதிலில் மோதியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் தரையிறங்க முயற்சித்தவேளை பறவை தாக்குதல் குறித்த எச்சரிக்கை அனுப்பபட்டது,அதன் பின்னர் அவர் மேடே சமிக்ஞையை வெளியிட்டார். இதனை தொடர்ந்து முதலில் இறங்க தீர்மானித்திருந்த இடத்திற்கு எதிரே உள்ள பகுதியில் தரையிறங்குவது உறுதி செய்யப்பட்டது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
விமானியும் துணைவிமானியும் வர்த்தக விமானங்களை 9000 மணித்தியாலங்களிற்கு மேல் செலுத்திய அனுபவம் உள்ளவர்கள் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
விமானவிபத்திற்கான உறுதியான காரணம் குறித்து எதனையும் சுட்டிக்காட்ட விரும்பாத அதிகாரிகள் விசாரணைகள் இடம்பெறுகின்றன. மேலும் விமானம் விபத்துக்குள்ளான பின்னர் தீப்பிடித்ததாலேயே பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டன என தெரிவித்துள்ளனர்.