துருக்கியில் பல ஆயிரம் உயிர்களை பலியெடுத்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த மீட்பு பணிகளின் போது நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலக நாடுகளை உலுக்கியுள்ளது. துருக்கியில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தையும், சிரியாவில் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தையும் கடந்து உள்ளது.
எனினும் உண்மையான பலி எண்ணிக்கை அங்கு 25 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மீட்பு பணிகளின் போது நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிகாரிகளுக்கு வியப்பு
அதன்படி கட்டிட இடிபாடுகள் ஒன்றை மீட்பு படையினர் அகற்றி வந்துள்ளனர். 10 மாடி அடுக்கு கட்டிடம் ஒன்றில் சிக்கி பலியான நபர்களின் உடல்களை போலீசார் ஒவ்வொன்றாக அகற்றி வந்தபோது கட்டிடம் ஒன்றிற்கு கீழ் சிறுமி ஒருவர் சிக்கியபடி இருந்துள்ளார்.
அவருக்கு மேலே பெரிய சுவர் ஒன்று விழுந்த நிலையில் இருந்துள்ளது. அருகிலேயே அந்த சிறுமியின் தம்பியும் இருந்துள்ளார். அதிகாரிகள் பார்த்தபோது அவர் தனது தம்பியின் தலையின் மேல் கை வைத்தபடி பாதுகாப்பாக இருந்துள்ளார்.
தன்னுடைய உயிர் போனாலும் கூட பரவாயில்லை
தனது தம்பியின் தலையில் எதுவும் விழுந்துவிடாதபடி பாதுகாப்பாக இருந்துள்ளார். தன்னுடைய உயிர் போனாலும் கூட பரவாயில்லை என்று அந்த சிறுமி தனது தம்பிக்கு கேடயமாக இருந்துள்ளார்.
அந்த சிறுமி 17 மணி நேரம் தனது தம்பிக்கு இப்படி பாதுகாப்பு அரணாக இருந்துள்ளார். மீட்பு பணியினர் அவர்களை மீட்க வந்த போது சிறுமி அவர்களை சிரித்தபடி வரவேற்று உள்ளார்.
அந்த சிறுமிக்கு அதிகபட்சம் 5 வயதுதான் இருக்கும். அவரின் தம்பிக்கு 3-4 வயது இருக்கும். எனினும் தனது உயிருக்கு அஞ்சாமல் அந்த சிறுமி தனது தம்பியை பொறுப்பாக காப்பாற்றி உள்ளார். அந்த சிறுமியை தற்போது துருக்கி ரியல் ஹீரோ என்று கூறி கொண்டாடி வருகிறது.
புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ஐநாவில் பணியாற்றும் மீட்பு படையினர் பலர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர்.