அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸ் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் . கமலா ஹாரிஸின் தந்தை ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர். தாய் ஷியாமளா கோபாலன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்.
கமலா ஹாரிஸின் தாயார் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியாளர் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர். கமலாவின் பெற்றோர் விவாகரத்து பெற்றப்பின், அவரின் தாயாரால் வளர்கப்பட்ட கமலா ஹாரிஸ், இந்திய பாரம்பரியத்துடன் இணைந்தே வளர்ந்துள்ளார்.
அதோடு கமலா ஹாரிஸின் தாய் தன்னை கருப்பின கலாசாரத்திற்கு மாற்றிக் கொண்டு தனது இரு மகள்களையும் அவ்வாறே வளர்த்துள்ளார். ‘நாங்கள் தன்நம்பிக்கைக் கொண்ட கருப்பின பெண்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதில் எனது தாய் உறுதியாக இருந்தார்’ என்று அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, கமலா ஹாரிஸ் தெரிவித்திருந்தார்.
துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதுமே அவரது உறவினர்கள் அதனை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிலையில், அண்மையில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது , இந்தியாவுக்கு வருமாரூ இருவருக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட கமலா ஹாரிஸ், விரைவில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அப்போது தமிழகத்துக்கு வரும் அவர், தனது சொந்த ஊருக்கும் செல்லவுள்ளாதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், கமலா ஹாரிசின் வாழ்க்கையை விளக்கும் வகையில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரபல பத்திரிகையாளர் சித்தானந்த ராஜ்கட்டா ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
மொத்தம், 300 பக்கங்கள் உடைய இந்த புத்தகம், இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. கமலா ஹாரிசின் தாய் ஷியாமளா கோபாலன் தமிழகத்தில் இருந்து படிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார், அங்கு உடன் படித்த ஆப்ரிக்காவைச் சேர்ந்த டொனால்டு ஹாரிசை திருமணம் செய்தார்.
அதே காலகட்டத்தில் ராஜ்கட்டாவின் தந்தையும் அமெரிக்காவுக்கு வேலைக்காக சென்றார். ஷியாமளா கோபாலனின் அமெரிக்க வாழ்க்கையில் துவங்கி, கமலா ஹாரிசின் சிறு வயது அனுபவங்கள், அவருடைய விருப்பங்கள் உள்ளிட்டவை இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
அதில் கமலா ஹாரிஸ் பிறந்த போது அவரது பிறப்பு சான்றிதழில், முதலில் கமலா அய்யர் ஹாரிஸ் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. பின் அது கமலா தேவி ஹாரிஸ் என மாற்றப்பட்டுள்ளதாக புதிய தகவலும் அப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமலாவின் சமையல் விருப்பம், இட்லி, தோசை மீதான காதல் போன்ற சுவாரஸ்ய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. அதோடு அரசியலில் வெற்றி பெற பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், போட்டிகள் குறித்து கமலா ஹாரிஸ் கூறியுள்ளவையும் அப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.