திருகோணமலையின் கன்னியா வெந்நீரூற்றில், இன்று ஞாயிற்றுக்கிழமை ஆடி அம்மாவாசை பிதிர் தர்ப்பணம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி சிறப்பாக நடைபெற்றது.
மேலும், பிள்ளையார் ஆலய ஆதின கர்த்தா திருமதி. கோகிலரமணி அம்மா அவர்களின் ஒழுங்கமைப்பில் சுகாதார நடைமுறைகளை பேணி பக்கதர்கள் தமது வழிபாட்டை முன்னெடுத்துள்ளனர்.
திருகோணமலை மேல் நீதிமன்ற அனுமதியுடன் ஆடி அம்மாவாசை தினம் முன்னெடுக்கப்பட்டதுடன், உப்புவெளி பொலிசார் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்கியிருந்தனர்.
ஆலயத்தில் அடியார்கள் பலர் பங்கு கொண்டு தங்களுடைய இறைவனடி சேர்ந்த உறவுகளுக்கு பிதிர் தர்ப்பணம் செலுத்தினர்.
குறித்த ஆலய ஆதின கர்த்தா கருத்து தெரிவிக்கையில்,
“நூற்றாண்டுகள் கடந்த வரலாற்றை கொண்ட கன்னியா பிள்ளையார் ஆலயம் தொல்பொருள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் பல இன்னல்களுக்கு மத்தியில் சட்ட ரீதியாக போராடி, நீதிமன்றத்தால் வரலாற்று சிறப்பு மிக்கபிள்ளையார் ஆலயத்தை மீண்டும் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு நிலம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் ஆடி அம்மாவாசை பிதிர் தர்ப்பணம் அந்த புனித நிலத்தில் இடம்பெற்றமை இன்றைய சிறப்பு ஆகும்.
மேலும், ஆலயம் அமைக்கும் திருப்பணிக்கு அடியார்களிடம் இருந்து ஒத்துழைப்பையும் நிதி உதவிகளையும் நாடி நிற்கின்றமையையும் குறிப்பிட்டார்.