இலங்கைப் பெண்களை போலியான அடையாளங்களுடன் திருமண வாக்குறுதிகளை வழங்கி நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் நைஜீரிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2017ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த நபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சமூக ஊடக வலையமைப்புகள் ஊடாக ஐரோப்பாவில் வசிக்கும் வைத்தியர்கள், பொறியியலாளர்கள் போன்ற தொழில் வல்லுநர்கள் என காட்டிக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் அதன் பின்னர் இலங்கையில் உள்ள பெண்களுக்கு முகநூல் மூலம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
மேலும் பெறுமதியான பரிசுப் பொட்டலங்களை சுங்கச் சாவடியில் இருந்து அகற்றுவதற்கு தேவையான பணமாக பெண்களிடம் இருந்து பெரும் தொகையை கோரியுள்ளார்.
மஹரகமவில் உள்ள ஏ.டி.எம் இயந்திரமொன்றில் இருந்து ஏமாற்றப்பட்ட பெண்ணினால் வைப்பிலிடப்பட்ட பணத்தை எடுக்க வந்த நைஜீரிய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நைஜீரியர்கள் குழுவொன்று இதேபோன்ற நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.