பல்பொருள் விற்பனை நிலையமொன்றில் இருந்து இரு தேயிலை பொதிகளை திருடிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொரலஸ்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மோதரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தராவார். இவர் தனது காலாவதியான மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பித்தல் தொடர்பில் கடந்த 14ஆம் திகதி அன்று மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
ஓட்டுனர் உரிமத்தை புதுப்பித்துக்கொண்ட இவர் வெரஹெர பிரதேசத்தில் உள்ள இந்த அலுவலகத்திற்கு அருகில் இருந்த பல்பொருள் விற்பனை நிலையமொன்றிற்குள் சென்றுள்ளார்.
பல்பொருள் விற்பனை நிலையத்தில் இருந்து இரு தேயிலை பொதிகளை திருடியுள்ளார். இதனை அறிந்து கொண்ட இந்த பல்பொருள் விற்பனை நிலையத்தின் ஊழியர்கள் , பொலிஸ் சீருடையில் இருந்த இவரை சுற்றிவளைத்து பிடித்து பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபர் திருடியதாக கூறப்படும் இரு தேயிலை பொதிகளின் பெறுமதியானது 2,240 ரூபாவாகும். கைது செய்யப்பட்டவர் நுகேகொடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை ஒழுக்கமற்ற முறையில் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை பணி இடைநிறுத்தம் செய்ய கொழும்பு வடக்கு பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.