திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி வடக்கு காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சந்தேக நபர்கள் நேற்றிரவு (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சூரியபுர விஷேட பொலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து குறித்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து ஸ்கேனர் இயந்திரம் மற்றும் மண்வெட்டி, கூடைகள் மற்றும் இரும்பு கம்பிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் கேகாலை – கொட்டியாகும்புர பகுதியைச் சேர்ந்த ஆர்.ஏ.மனோஜ் (41 வயது) மற்றும் கந்தளாய் – யுனிட் 2 பகுதியைச் சேர்ந்த எம்.டபிள்யூ.டீ.சன்ஜய (42 வயது) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த இரண்டு சந்தேக நபர்களையும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.