ஆர்ஜென்டினாவின் (Argentina) தலைநகர் பியூனஸ் அயர்ஸின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு கால்வாய் ஒன்று திடீரென சிவப்பு நிறமாக மாறியுள்ளது.
நேற்றிலிருந்து குறித்த கால்வாயில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால் அப்பகுதியினர் கடும் அச்சத்தில் உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அந்நாட்டு ஊடக அறிக்கைகளின்படி, இரசாயன கலவைகள் ஏதேனும் கொட்டப்பட்டதாலோ அல்லது அருகிலுள்ள கிடங்கில் இருந்து இரசாயனக் கழிவுகள் கொட்டப்பட்டதாலோ இந்த நிற மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நிறம் மாற்றத்திற்கான காரணத்தைக் கண்டறிய கால்வாயிலிருந்து நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பியூனஸ் தலைநகரின் மையத்திலிருந்து சுமார் 10 கி.மீ (6 மைல்) தொலைவில் உள்ள தோல் பதப்படுத்தும் மற்றும் ஆடை தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி வழியாக செல்லும் இந்த கால்வாயில் பல உள்ளூர் நிறுவனங்கள் நச்சுக் கழிவுகளை அப்புறப்படுத்துவதாக அப்பகுதி குடியிருப்பாளர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன், தற்போது, குறித்த கால்வாயின் நீர் சிவப்பு நிறமாக மாறியிருந்தாலும், பிற நேரங்களில் அது மஞ்சள் நிறமாகவும், பருகினால் தொண்டையில் எரிச்சலை ஏற்படுத்தும் அமில வாசனையுடனேயே காணப்படுவதாகவும் அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, கால்வாயின் இத்தகைய மாற்றம் இயற்கையானதா அல்லது ஏதேனும் இரசாயன மாற்றமா என அந்நாட்டு ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்