புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிபுரம் 20 வீட்டுத்திட்டத்தில் கிணற்றுக்குள் வீழ்ந்த குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
இரண்டு வயது ஆண் குழந்தையே இவ்வாறு கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று காலை (18) குறித்த குழந்தையை வீட்டில் தூங்க வைத்துவிட்டு, குழந்தையின் தாய் பக்கத்திலுள்ள சகோதரியின் வீட்டிக்குச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சில மணி நேரத்தின் பின்பு மீண்டும் வீட்டுக்கு வந்த தாய், குழந்தை தூங்கிய இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு குழந்தை இருக்காமையை அவதானித்து, அதிர்ச்சியடைந்த தாய் காணாமல் போன குழந்தையை அக்கம் பக்கம் சென்று தேடிப்பார்த்துள்ளார்.
சுமார் அரை மணி நேரத்தின் பின்னர், குறித்த குழந்தை கிணற்றுக்குள் வீழ்ந்து கிடப்பதை அவதானித்த உறவினர்கள், அக்குழந்தையை மீட்டு உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அக்குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த குறித்த குழந்தையின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உயிரிழந்த குழந்தைக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், பீ.சீ.ஆர் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.