தலவாக்கலையில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த நான்கு வர்த்தகர்களுக்கு எதிராக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தலவாக்கலை நகரில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு சில வியாபாரிகள் முட்டைகளை விற்பனை செய்வதாக கிடைத்த முறைப்பாட்டின் பேரில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, சம்பந்தப்பட்ட வியாபாரிகள், சிவப்பு முட்டைகளை 50 ரூபாய்க்கும், வெள்ளை முட்டைகளை 48 ரூபாய்க்கும் விற்பனை செய்துள்ளனர்.
இதன்படி, சம்பந்தப்பட்ட வர்த்தகர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், இம்மாதம் 28ஆம் திகதி நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டதாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்டத் தலைவர் அமில ரத்நாயக்க தெரிவித்தார்.
முட்டையின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய நுகர்வோர் விவகார அதிகாரசபை அண்மையில் புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தது.
வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.