திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் பிரதேசத்தில் தமிழ் பூர்வீக பிரதேசங்களில் விகாரைகள் அமைத்து சிங்கள குடியேற்றங்களை அமைப்பதற்கு திட்டம் தீட்டுவதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
திருகோணமலை பெரியகுளம் பிரதேசத்தில் 40 வருடங்களுக்கு மேலாக பூர்வீக குடிகளாக இருக்கும் தமிழ் பிரதேசத்தில் இவ்வாறு விகாரை ஒன்று அமைப்பதற்கு வேலைகள் முன்னெடுத்துச் செல்வதாகவும் சிங்கள மக்கள் இல்லாத ஒரு பிரதேசத்தில் இவ்வாறு விகாரை அமைப்பது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அவ்வாறு இப்பிரதேசங்களில் விகாரை அமைக்கப்பட்டால் தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறும் எனவும் தமக்கான பூர்வீக நிலத்தை விட்டு தருமாறு பெரியகுளம் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மேலும் திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியில் பெரியகுளம் பிரதேசத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக சில விஷமிகளால் மழை ஒன்றிலிருந்து புதையல் தோண்டபட்டதாகவும் அவ்வாறு புதையல் தோண்டப்பட்டதாகக் கூறப்படும் மலைத் தொடர் ஒன்று அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அடையாளமிடப்பட்டு பாதுகாப்பு படையினரிடம் கையளித்துள்ளனர்.
இந் நிலையில் அவ்விடத்தில் விகாரை ஒன்றை அமைக்க வேண்டும் என பிக்கு ஒருவர் வேலைகளை முன்னெடுத்து செல்வதாகவும் அவ்வாறு இப்பிரதேசங்களில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டால் அதை அண்டியுள்ள தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறும் எனவும் இதனால் தமிழ் பிரதேசங்கள் சிங்கள மயமாக்கப்படுவதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
இவ்வாறு அமைக்கத் தீர்மானிக்கப்பட்டு இருக்கும் விகாரைக்கான பாதையினை பெறுவதற்காக அப்பிரதேசத்தில் பரம்பரை பரம்பரையாக வசித்துவரும் ஒருவரின் காணியின் ஒரு பக்கத்தினை தருமாறு பிக்கு ஒருவர் கட்டாயப்படுத்துவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.
தாம் ஆண்டாண்டு காலம் வசித்து வந்த காணியின் ஒரு பக்கத்தின் ஊடாக இவ்வாறு பாதையினை கேட்டு கட்டாயப்படுத்துவது தமது அடிப்படை உரிமை மீறப்படுவதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே சட்டம் எனும் தொனிப்பொருளில் கீழ் செயற்ப்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி எமது நில உரிமையினை பெற்றுத்தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுப்பதுடன், தமது பூர்வீக நிலத்தை விட்டு வேறு இடங்களுக்கு செல்ல முடியாது எனவும் தமது சொந்த நிலத்தினை மீட்டு தருமாறும் பெரியகுளம் பிரதேச மக்கள் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.