தமிழ் அரசியல் கைதிகளையும் கொரோனா விட்டு வைக்கவில்லை என குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொவிட் தொற்று சிறைச்சாலைக்குள் பரவத்தொடங்கியுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நடேசன் தருமராசா என்ற தமிழ் அரசியல் கைதி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதே போன்று கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த செல்லத்துரை கிருபாகரன் என்ற அரசியல் கைதிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் மிக நீண்டகாலமாக சிறைத்தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு வகையிலான நோய்நொடிகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
சிறைச்சாலைகளில் கைதிகளை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பமும் நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக அவர்களுக்கு போசாக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் அற்று அவர்கள் உடல் உள ரீதியில் அதிக பலவீனம் அடைந்தவர்களாக இருக்கிறார்கள்.
கற்புலன் செவிப்புலன் பாதிப்பு, சுவாசக்கோளாறு , ஒருதலைக்குத்து, சிறுநீரக பாதிப்பு இருதய நோய் , நீரிழிவு, முள்ளந்தண்டு பாதிப்பு ,முழங்கால் மூட்டு தேய்வு , ஆஸ்மா, மன அழுத்தம், தோல் நோய்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் அரசில் கைதிகளை பொறுத்தமட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான நீண்ட கால சிறைவைப்பு, துரித விசாரணையற்ற விளக்கமறியல், கடுமையான தண்டனை தீர்ப்புகள் என அனுபவித்து வரும் கஸ்டங்களுக்கு மேலதிகமாக இவ்வாறு மருத்துவ தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் துயரப்படுவது எத்தனை கொடியது? இதனை மோசமான உரிமைய மீறல் செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது.
அரசாங்கமானது , தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் கரிசணை கொண்டுள்ளதாக தெரிவித்து வருகின்ற நிலையில் , இது போன்ற அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வினை காணாமல் இருப்பது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துகிறது. சிறைத்துறையும் மருத்துவத்துறையும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் மாற்றான் தாய் மனப்பாங்குடன் நடந்துகொள்வதை நிறுத்த வேண்டும். அரசியல் கைதிகளுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதில் ஏதேனும் நடைமுறை இடையூறுகள் காணப்படுமாயின் , விசேட பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அவர்களை மாற்றி யாழ் போதனா வைத்தியசாலையில் தேவையான சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.