மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆலங்குளம் மற்றும் குகநேசபுரம் கிராமங்களில் நிலவும் காணிப்பிணக்கு தொடர்பாக இன்று திம்புலாகல தேவாலங்கார தேரர் மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
தமது காணிப்பிணக்கை தீர்த்து தருமாறு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு அரசியவாதிகளான , சி.சந்திரகாந்தன், ச.வியாழேந்திரன், கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன் ஆகியோரிடம் முறையிட்டும், அவர்கள் யாரும் தமது கோரிக்கையை கண்டுகொள்ளாததையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் தேரரிடம் முறையிட்ட நிலையில் தேரர் அங்கு சென்றிருந்தார்.
தங்களது காணிகளை முஸ்லிம்கள் சிலர் அத்துமீறி அபகரித்து வருவதாகவும், அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அவர்கள் சட்டவிரோதமாக காணி உறுதிப்பத்திரங்களை பெற்றுள்ளதாகவும், அதனால் தமது கோரிக்கையை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லையென்றும் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதோடு இது குறித்து பொலிஸ் நிலைத்திலும் முறைப்பாடு பதிவு செய்தும் பலன் எதுவும் கிடைக்கப் பெறவில்லையென்றும் அவர்கள் தேரரிடம் கவலை தெரிவித்தனர். இதன்போது பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது அரச ஆவணங்களையும் தேரரின் பார்வைக்கு சமர்ப்பித்தனர்.
பிரதேச செயலகத்தினால் தங்களுக்கு காணி அரச ஓப்பம் வழங்கப்பட்டிருந்தும் , சிலர் தம்மை பயமுறுத்தி குறித்த காணிகுள் அத்துமீறி குடியேறி வருவதாகவும் கூறிய மக்கள், அவ்வாறு குடியேறியவர்களை வெளியேற்றி தருமாறும் தேரரிடம் கோரிக்கை விடுத்தனர்.
பாதிக்கப்பட்டவர்களிடம் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்த தேரர் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகருடன் அது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இவ் விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறும் , அதற்கான தீர்வு கிடைக்கப்பெறவில்லையென்றால், கிழக்கு மாகாண ஆளுநரிடம் முறையிடுவதாகவும் அதற்கும் தீர்வு கிடைக்கவில்லையென்றால், மட்டக்களப்பில் உள்ள காந்தி பூங்காவில் ஒன்று கூடி நியாயம் வேண்டி கவனயிர்ப்பு போராட்ட நடவடிக்கையில் ஈடுபட எல்லோரும் தயாரக வேண்டும் எனவும் தேரர் கேட்டுக்கொண்ட நிலையில் பாதிக்கப்பட்ட மக்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு குத்தகை அடிப்படையில் கடைகள் கட்டுவதற்காக வழங்கப்பட்ட காணிக்குள் தனி நபர் ஒருவர் அத்துமீறி காணி அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவித்து அண்மையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் மேற்படி கொழும்பு வீதியினை அன்மித்த குகநேசபுரம் மற்றும் ஆலங்குளம் ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்தோர் சிலர் கடந்த ஒருமாத காலமாக கடை தொகுதி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகரை பிரதேச செயலகத்தின் அனுமதி பெற்றே இவ் நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக கூறுவதுடன், அவர்கள் தற்காலிக கடை அமைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளநிலையில் அருகில் வசிக்கும் நபர் ஒருவர் தமக்கு வழங்கப்பட்ட காணியின் அளவினை விட மேலதிகமாக காணி அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தே மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த பிரதேசம் தற்போது காணிப் பிணக்கு அடிக்கடி இடம்பெறும் வலயமாக மாறியுள்ள நிலையில் மட்டக்களப்பு தமிழ் அரசியல்வாதிகள் யாரும் அதனை கண்டுகொள்ளவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை குகநேசபுரம் கிராமம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் உருவாக்கப்பட்டது ஆகும். துணைப்படையான கருணா குழுவின் நிதிப்பொறுப்பாளராக இருந்த குகநேசன் , கொழும்பு, கொட்டாவ பகுதியில் விடுதலைப் புலிகளின் அதிரடி நடவடிக்கையில் கொல்லப்பட்டிருந்தார்.
எனினும் அவரது பெயர் கிராமத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. தமிழ் மக்களிற்காக உருவாக்கப்பட்ட அந்த கிராமத்தின் பல பகுதிகளை, அருகிலுள்ள ஓட்டமாவடி முஸ்லிம் மக்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக பாதிக்கபட்டவர்கள் கூறுகின்றனர்.
அது குறித்து சட்டவிரோத காணி அபகரிப்பாளர்களிடமிருந்து தமது காணிகளை மீட்க, அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனிருக்கவில்லை.
இவ்வாறான நிலையில் காணிகளை மீட்டு தந்தால், கிராமத்தின் மத்தியில் விகாரை அமைக்க தாமே காணி ஒதுக்கி தருவதாக பிரதேசவாசிகள் இன்று தேரரிடம் உறுதியளித்துள்ளனர்.
எனினும், அப்படி செய்ய வேண்டியதில்லையென்றும், மக்களின் காணிகளை அவர்களிடமே மீட்டு தருவது மட்டுமே தனது நோக்கம் எனவும் திம்புலாகல தேவாலங்கார தேரர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.