கிளிநொச்சியில் உள்ள கண்டாவளை கல்லாறு பகுதியில் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் அழிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு (25-04-2024) 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த கும்பல் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளை பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்தும், வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.
பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிறிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு கிராமங்களைச் சேர்ந்து சில இளைஞர்கள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்தப் பிரதேசங்ளில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, களவு, வாள்வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு கூட முன்வருவதில்லை என தெரியவந்துள்ளது.
இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிற்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் என பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
குழுவின் செயற்பாடுகள் குறித்து ஒரு சிலரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலிஸாரினால் உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.