யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் மகன் ஒருவர் விஷம் அருந்திய செய்தி கொண்டு அதிர்ச்சியடைந்த தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த சம்பவத்தில் கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த 70 வயதான முத்துத்ததம்பி விவேகானந்தம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் 2வது மகன் நேற்று முன்தினம் (07-11-2023) விஷம் அருந்தியதனால் அதிர்ச்சியில் தந்தை மயங்கியுள்ளார்.
இந்த நிலையில் அவரை உடனடியாக கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
இதேவேளை, விஷம் அருந்திய மகன் உயிர் தப்பிய நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.