வவுனியாவில் பேருந்தில் ஏற முற்பட்ட நபரொருவர் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்றையதினம் (18-03-2024) காலை பூவரசங்குளம் சந்தியிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த விபத்தில் பூவரசங்குளம் மணியர்குளம் பகுதியினை சேர்ந்த 76 வயதுடைய சிவக்கொழுந்து வள்ளிப்பிள்ளை என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்து குறித்த பஸ் தரிப்பிடத்தில் தரித்து நின்றுள்ளது.
குறித்த பேருந்தில் ஏறுவதற்காக வீதியின் மறுபக்கத்தில் இருந்து பஸ்ஸின் முன்பக்கமாக வந்த முதியவரொருவர் பேருந்தில் ஏற முற்பட்ட வேளை சாரதி பேருந்தை செலுத்தியமையினால் பேருந்தின் சில்லில் சிக்குண்டு முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து பேருந்தின் சாரதியினை கைது செய்துள்ளனர்.
மேலும் உயிரிழந்தவரின் சடலம் பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டமையுடன் பேருந்தினை பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸார் எடுத்துச் சென்றனர்.