வவுனியாவில் மாரடைப்பால் கணவன் உயிரிழந்ததை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,
இச்சம்பவம் நேற்றையதினம் (18-04-2024) மதியம் வவுனியா – நெடுங்கேணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நெடுங்கேணி, 6ம் கட்டை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் அவசரமாக நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கிருந்து குறித்த நபரை மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தயாராகிய போது குறித்த குடும்பஸ்தரின் மனைவி வவுனியா வைத்தியசாலை செல்வதற்கான பொருட்களை எடுத்து வர வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன்போது, நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த தகவலை வீட்டிற்கு சென்றிருந்த அவரது மனைவிக்கு தெரியவந்ததையடுத்து, கணவனின் இறப்பை தாங்க முடியாது மனைவி தவறான முடிவெடுத்து வீட்டில் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் 18 மற்றும் 15 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய ராமச்சந்திரன் ரவீந்திரன் மற்றும் மனைவியான 49 வயதுடைய ராமச்சந்திரன் ஜோதீஸ்வரி ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.