பொய்யான தகவல்களை வழங்கி இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான வழக்கில் அவரை சந்தேகநபராக பெயரிடுவதா? இல்லையா? என்பது குறித்த உத்தரவு ஏப்ரல் 6ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என்று கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ், நேற்று உத்தரவிட்டார்.
உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னர், இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடமும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளரிடமும் வாக்குமூலங்களை பதிவு செய்து மன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு (சீ.ஐ.டி) கொழும்பு பிரதான நீதவான் கட்டளையிட்டார்.
இந்நிலையில் டயானா கமகே இரட்டைக் குடியுரிமை அந்தஸ்து இல்லாமல் இலங்கையில் வசிக்கும் பிரித்தானியப் பிரஜை என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு பொய்யான தகவல்களை வழங்கி இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்து சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சீ.ஐ.டியினர் விசாரணைகளை ஆரம்பித்ததுடன் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில் குறித்த வழக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேற்குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நபர் அப்பட்டமான குற்றத்தை செய்துள்ளார் என்பது இதுவரை நடந்த விசாரணைகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன மன்றுக்கு அறிவித்தார்.
மேலும் அவர் முன்வைத்த வாதங்களைக் கருத்திற்கொண் நீதவான், சந்தேகநபராக பெயரிடுவதா? இல்லையா? என்பது குறித்த உத்தரவு ஏப்ரல் 6ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார்.