ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ள டயானா கமகேவிற்கு ஏதேனும் புத்திக்குறைபாடு இருக்கக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கோவிட் வைரஸ் தொற்றுப்பரவல் காரணமாக நாட்டு மக்களுக்கு சேவையாற்ற முடியாமல் போன இரு வருட காலத்தை மீண்டும் பெற்றுக்கொடுக்கும் வகையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலத்தைப் பயன்படுத்தி, ஜனாதிபதியின் பதவிக்காலத்தையும் நாடாளுமன்றத்தின், பதவிக்காலத்தையும் மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்க வேண்டும் என நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமனே சபையில் யோசனையொன்றை முன்வைத்திருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
டயானா கமகேவிற்கு ஏதேனும் புத்திக்குறைபாடு இருக்கக்கூடும் என்றே தோன்றுகின்றது.
ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மேலும் இருவருடங்களால் நீடிக்கவேண்டும் என்று டயானா கமகே கூறினாலும், இவ்விடயத்தில் ஜனாதிபதியின் நிலைப்பாடு என்னவென்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா? அவர் இதற்கு உடன்பட வேண்டும் அல்லவா? ஜனாதிபதி இவ்வாறானதொரு நிலைப்பாட்டில் இருப்பதாக நான் கருதவில்லை.
எமது நாட்டின் வரலாற்றைப் பொறுத்தமட்டில் இதற்கு முன்னரொருபோதும் ஜனாதிபதியின் பதவிக்காலம் நீடிக்கப்படவில்லை.
நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடித்ததால் ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கு என்ன நேர்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
நான் ஜனாதிபதியாக இருந்தபோது எனது பதவிக்காலத்தைக் குறைத்துக்கொண்டேன்.
அந்தவகையில் வேறு எந்தவொரு ஜனாதிபதியும் தமது பதவிக்காலத்தை மீண்டும் அதிகரித்துக்கொள்வதற்கு முற்படுவார்கள் என்று நான் கருதவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.