நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட புளியாவத்தை நகரில், மாட்டிறைச்சி கடை அமைக்கும் முயற்சியை இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தடுத்து நிறுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புளியாவத்தை பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமையவே ஜீவன் தொண்டமான் இந்நடவடிக்கை எடுத்துள்ளதாக அவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசத்தில் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் மாட்டிறைச்சி கடை அமைக்கப்படுவதால் புளியாவத்தை பிரதேச மக்கள் அதற்கு எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
நோர்வூட் பிரதேச சபை டெண்டர்
இது தொடர்பில் ஜீவன் தொண்டமானிடம் கோரிக்கையும் விடுத்துள்ளனர். அதேநேரத்தில் நோர்வூட் பிரதேச சபை ஊடாக புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி கடை ஒன்று அமைக்க கேள்வி (டெண்டர்) அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த டெண்டருக்காக நோர்வூட் பிரதேச சபை 15 இலட்சம் ரூபாய் அறிவித்த நிலையில் நபர் ஒருவர் டெண்டருக்காக குறித்த பணத்தை பிரதேச சபைக்கு செலுத்தியுள்ளார்.
இந்நிலையில் மக்களின் கோரிக்யை அடுத்து புளியாவத்தை பகுதிக்கு சென்று பிரதேச மக்களுடன் கலந்துரையாடிய ஜீவன் தொண்டமான், மாட்டிறைச்சி கடைக்கான டெண்டர் அறிவித்தலை நிறுத்தி டெண்டருக்காக பெறப்பட்ட 15லட்சம் ரூபாவை உரியவரிடம் கையளிக்குமாறு தவிசாளர் குழந்தை ரவிக்கு பணித்துள்ளதாகவும் ஜீவனின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.