ஐக்கிய நாடுகளின் 76 ஆவது பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு பயணமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க் நகரை சென்றடைந்துள்ளார்.
நியூயார்க்கில் உள்ள ஜான் எப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி தலைமையிலான பிரதிநிதிகளை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி மொஹான் பீரிஸ் வரவேற்றார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில், இம்மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இம்முறை கூட்டத்தொடர், “கொவிட் 19 வைரஸ் தொற்றுப்பரவலில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை வளர்த்தல், நிலைத்தன்மையை மீளக் கட்டியெழுப்புதல், பூமியின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மறுமலர்ச்சி” என்ற தொனிப்பொருளிலேயே இடம்பெறவுள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக பல நாடுகளின் அரச தலைவர்கள் தற்போது நியூயோர்க் நகரை சென்றடைந்துள்ளனர்.
அரச தலைவர்கள் மாநாட்டின் இரண்டாம் நாளன்று காலை ஜனாதிபதி உரையாற்ற உள்ளார். எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறும் உணவு கட்டமைப்பு மாநாட்டிலும், வெள்ளிக்கிழமை இடம்பெறும் எரிசக்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலிலும் அவர் கருத்து வெளியிட உள்ளார். இந்த கூட்டத்தொடரின் பின்னர் ஜனாதிபதி பல அரச தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட உள்ளார்.