ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மற்றுமொரு பாரிய தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த திங்கட்கிழமை பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டம் நேற்றைய தினம் கைவிடப்பட்டதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக பதவியை இராஜினாமா செய்யுமாறு சமரசிங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் மறுசீரமைப்புச் செயற்பாடுகளைத் தொடங்குவதற்கு இந்நாட்டில் உள்ள பல அரசியல் இயக்கங்கள் தமது வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, நாளை பிற்பகல் 2.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மாபெரும் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்து மௌனமாக இருக்காவிட்டால் இந்த பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை பாரிய மக்கள் போராட்டமாக மாற்றுவோம் எனவும் சமரசிங்க எச்சரித்துள்ளார்.