யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க தொணடமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த பெருந் திருவிழா இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.
தற்போதைய கொவிட்-19 அச்சுறுத்தல் நிலையை கருத்திற் கொண்டு சுகாதாரத் தரப்பினர் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஆலய வருடாந்த பெருந் திருவிழாவை நடத்த அறிவுறுத்தியுள்ளனர்.
ஆலய திருவிழாவில் பங்கேற்பதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள், ஆலய தரப்பினர் மற்றும் குறித்த ஆலய சூழலில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவோர் அனைவரும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே அனுமதிகப்படுவார்கள் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதற்கமைவாக, மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருவோரில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆலய திருவிழா காலத்தில் பூ எடுத்தல் எனும் இறை பணியில் ஈடுபடும் அடியவர்களில் நால்வரது மாதிரிகள் மீள் பரிசோதனைககு உட்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருப்பதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது