செம்மணி மனித புதை குழி விடயம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியமளிக்க சோமரட்ன ராஜபக்ச உடன்படுவார் எனில் அதற்கு அரசாங்கம் வழி செய்து கொடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு இடம்பெறுவதை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்..
செம்மணி மனித புதைகுழி ஆய்வு நடைபெறுகின்ற இடத்திலே ஸ்கேனர் கருவி பயன் படுத்தப்படுகின்றது. அதனைப் பயன்படுத்துவதன் மூலமாக நிலத்திற்கு அடியிலே ஏதாவது அசாதாரணமான விடயங்கள் காணப்பட்டால் அல்லது அசைவுகள் இருந்தால் அந்த இயந்திரம் அதனை வெளிக்கொண்டு வரும் எனக் கூறுகின்றனர்.
இதற்கமைய இன்றைய பரிசோதனையில் தரவுகள் பெறப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அந்த தரவுகளை ஆராய்ந்து அது எப்படியாக இருக்குமென்று அனுமானங்கள் செய்து அங்கு வேறு எந்த இடத்திலே மனித எலும்புக் கூடுகள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கிறது என்பதனை அறிந்து அந்தந்த இடங்களிலே அகழ்வுகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரின் குற்றப் புலனாய்வுத் துறையின் மூலமாக பொது மக்களுக்கு ஒரு அறிவித்தலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் இங்கே கண்டெடுக்கப்பட்ட தடயப் பொருட்களை அவர்கள் வந்து பார்வையிடலாம் எனவும், அவ்வாறு பார்வையிடுகிற போது அதில் ஏதாவது தங்களுக்கு தெரிந்தது அதாவது தங்களுடைய உறவினர்கள் யாரும் வைத்திருந்ததா என அடையாளம் காண முடியுமா என்பதை தெரிவிக்க முடியும் எனவும் அதற்கு இணங்க பொலிஸ் குற்றவிசாரணைப் பிரிவு விசாரணையை முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனித புதைகுழியில் இப்பொழுது 130 இற்கும் மேற்பட்ட எலும்புத் தொகுதிகளாக கண்டெடுக்கப்பட்ட இருக்கின்றன. இவ்வாறு ஒவ்வொருநாளும் இங்கு எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்படுகின்றன.
இதனுடைய பின்னணியை நாங்கள் பார்ப்போமாக இருந்தால் 1999 ஆம் ஆண்டு சோமரட்ன ராஜபக்ச நீதிமன்றத்தில் சொன்ன கூற்றின் பிரகாரம் 15 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் கண்டெடுக்கபட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து தற்செயலாக கண்டெடுக்கப்பட்ட எலும்புகூட்டினால் தொடரும் அகழ்வு பணியில் நூற்று கணக்கான எலும்பு கூட்டு தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கண்டெடுக்கப்படுகின்றவை அந்த வேளையில் சோமரட்ன ராஜபக்ச சொன்ன கருத்துக்களுடன் ஒத்துப் போகிறன.
அவர் 300 தொடக்கம் 400 வரையான உடல்கள் புதைக்கப்பட்டது என்றும் அதிலே இராணுவத்தின் மிக உயர் அதிகாரிகள் பங்காளர்களாக இருந்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
அவர் நீதிமன்றத்தில் தெரிவித்த விடயத்தின் உண்மைத்தன்மை 25 வருடங்களுக்குப் பின்னர் தற்போது வெளிப்படுகின்றது.