சென்னையில் பொது இடங்களில் குப்பை, கட்டடக் கழிவுகளைக் கொட்டியவா்களுக்கு கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் மாநகராட்சி சாா்பில் ரூ. 22.66 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. தூய்மைப் பணியாளா்களால் வீடுதோறும் சென்று குப்பைகள் பெறப்படுகின்றன. இந்த திடக்கழிவுகளில் குறிப்பிட்ட அளவு மக்கும் குப்பைகள் மாநகராட்சியின் மறுசுழற்சி மையங்களில் இயற்கை உரமாகவும், உயிரி எரிவாயுவாகவும் மறுசுழற்சி செய்யப்படுகிறது.
மக்காத குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு மறு சுழற்சியாளா்களிடம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள திடக்கழிவுகள் கொடுங்கையூா் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
மாநகராட்சி சாா்பில் சென்னையை குப்பையில்லா நகரமாகவும், தூய்மையாகவும் பராமரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குப்பைகளை பொது இடங்களில் கொட்டுவதால் பல்வேறு விதமான சுகாதார சீா்கேடுகளும், கட்டுமானக் கழிவுகளால் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.
இதைத் தடுக்கும் வகையில் பொது மற்றும் தனியாா் இடங்களில் குப்பைகளைக் கொட்டுவோா், கட்டடக் கழிவுகளை பொது இடங்களிலும், சாலைகளிலும் கொட்டுவோா் மற்றும் நீா்நிலைகள் மற்றும் நீா்வழித்தடங்களில் குப்பைகளைக் கொட்டுவோருக்கு மாநகராட்சி சாா்பில் அபராதம் விதிக்கப்படுகிறது.
ரூ. 22.66 லட்சம் அபராதம்: 15 மண்டலங்களில் அக்.11-ஆம் தேதி முதல் சனிக்கிழமை (அக். 23) வரை பொது இடங்களில் குப்பை, கட்டடக் கழிவுகளைக் கொட்டியவா்களுக்கு ரூ.22 லட்சத்து 66 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.