சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு மட்டும் சில சிறப்பு சலுகைகளை கொடுக்க அரசு வைத்திருக்கும் திட்டம் குறித்த இரகசிய தகவல் கசிந்துள்ளது.
உணவகங்களுக்கு செல்லுதல், கலை நிகழ்ச்சிகளுக்கு செல்லுதல் முதலான விடயங்கள் அந்த சலுகைகளில் அடங்கும் என உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகைகளை வழங்குவதா என்பது குறித்த விவாதங்கள் சுவிட்சர்லாந்தில் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், அரசின் ஆவணம் ஒன்று லீக்கானதிலிருந்து தங்களுக்கு அது குறித்த சில தகவல்கள் கிடைத்துள்ளதாக சுவிஸ் செய்தித்தாளான Blick தெரிவித்துள்ளது.
அந்த செய்தித்தாள், பெடரல் அரசின் உள் விவகாரத்துறையின் இரகசிய ஆவணம் ஒன்று லீக்காகியுள்ளதாகவும், அதில், தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு மட்டும் சில சிறப்பு சலுகைகளை கொடுக்க அரசு திட்டம் வைத்துள்ளது குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஆக, தங்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டது என்பதற்கான ஆதாரத்தைக் காட்டுவோர், இனி உணவகங்களுக்கு சென்று உணவருந்தவும், மற்றவர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளுக்கு செல்லவும் அனுமதி வழங்கப்படும் என அந்த ஆவணம் தெரிவித்துள்ளது.
என்றாலும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் கடைகளுக்குச் செல்லும்போதும், பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும்போதும் மாஸ்க் அணிந்துதான் செல்லவேண்டும் என்றும் அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, எதிர்காலத்தில் பயணம் செய்ய விரும்பும் அனைவருமே தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டியிருக்கும் என சுவிஸ் ஜனாதிபதியான Guy Parmelin தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ளது என்றாலும், இந்த சலுகைகள் உடனடியாக வழங்கப்படாது என்றும் அதே ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயதுவந்தவர்களில் பெரும்பான்மையினருக்கு தடுப்பூசி போடப்பட்டால் மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுமாம்.
அப்படி பார்த்தால், மே அல்லது ஜூன் மாதத்தில்தான் அப்படி ஒரு நிலையை எட்டமுடியும்.
மேலும், ஒவ்வாமை, கர்ப்பம் மற்றும் சில மருத்துவ காரணங்களால் தடுப்பூசி போட்டுக்கொள்ள இயலாதவர்களுக்கும் இந்த சலுகை அளிக்கப்படும். ஆனால், அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை நிரூபிக்கவேண்டியிருக்கும்.
நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி (herd immunity)யை அடைந்துவிட்டார்கள், இனி கொரோனா பரவல் இருக்காது என்ற நிலை ஏற்படும்போது, இந்த சலுகைகள் முடிவுக்குவந்துவிடும்.