அரசாங்கம் கால தாமதமாகி தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தமையினால் சுகாதார கட்டமைப்புக்கள் தற்போது சரிவடைந்துள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிகிச்சையை வழங்குவதற்கான வசதிகள் இன்மையால், சிகிச்சை பெறாமலேயே பலர் உயிரிழந்துள்ளனர். இது இலங்கை வரலாற்றில் இதுவரைக்காலமும் இல்லாததொரு நிலைமை என ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இத்தகைய நிலைமையில், அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டாம் என பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளுக்கு உயர்மட்டத்திலிருந்து அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை சுமார் 160 அத்தியாவசிய மருந்துகளுக்கு நாட்டில் தற்போது பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்