கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சுற்றுலா உள்ளிட்ட துறைகள் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், கடன் சுமை காரணமாக திவாலாகும் நிலையில் இலங்கை உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பல நாடுகளில் அரசியல் பொருளாதார சூழ்நிலைகளை கடும் சோதனைக்கு உள்ளாக்கி உள்ளது. மருத்துவ கட்டமைப்புகளுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை உலக நாடுகள் செலவு செய்து தங்கள் மக்களுக்காக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
மேலும் தற்போது கொரோனா தடுப்பூசி வழங்குவதற்காகவும் ஒரு கணிசமான தொகையை செலவு செய்து வருகின்றன உலக நாடுகள்.
கடனில் மூழ்கிய இலங்கை
இலங்கையின் மொத்த உற்பத்தியில் 10 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ள சுற்றுலாத்துறையும் கொரோனா காரணமாக முடங்கியுள்ளது. இதன் காரணமாக இலங்கையின் மொத்த கடன் தொகையும் வட்டித் தொகையும் உயர்ந்து வருகிறது.
இலங்கையின் மொத்த கடன் மதிப்பு என்று 7.3 பில்லியன் டாலர் அதாவது இலங்கை ரூபாய் மதிப்பில் கடன் தொகை 1.49 லட்சம் கோடியாக உள்ளதாக தி கார்டியன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த (2021) நவம்பர் மாத அளவீட்டின்படி இலங்கை அரசின் அன்னிய செலாவணி கையிருப்பு இலங்கை ரூபாய் மதிப்பில் உற்பத்தி 32462 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கைவிட கடன் தொகை அதிகமாக உள்ளது.
இலங்கையில் உணவு தட்டுப்பாடு
கடன் சுமை எவ்வளவு இருந்தாலும் இயற்கை வளம் கொண்ட இலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது இல்லை என்ற நிலையில் போதிய திட்டமிடல் இல்லாமல் இலங்கை அரசு இயற்கை முறை விவசாயத்தை கையில் எடுத்தது இதன் காரணமாக அங்கு ரசாயன உரங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது.
இதனால் உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு எதிர்பார்த்த மகசூல் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உரத் தட்டுப்பாடு காரணமாக நெல் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 35 முதல் 40 மூட்டை அறுவடை செய்த இடத்தில் 15 முதல் 20 முட்டைகள் மட்டுமே தற்போது அறுவடை செய்யப்பட்டு உள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
ஒரு டீயின் விலை ரூ.70
இலங்கையில் இருக்கும் அன்னிய செலாவணியை வெளியில் சென்று விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் இலங்கை அரசு வெளிநாட்டிலிருந்து தானிய இறக்குமதியை நிறுத்தியுள்ளது.
இவ்வாறு தானிய விளைச்சல் இல்லாமல் போதிய இறக்குமதியும் இல்லாததால் இலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி விண்ணை நோக்கி சென்றுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள ஹோட்டல்களில் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பால் டீ உள்ளிட்டவை தற்போது 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது இது இந்திய மதிப்பில் 26 ரூபாயாக உள்ளது. மேலும் ஒரு கிலோ கேரட் 560 ரூபாய்க்கும் ஒரு கிலோ மிளகாய் ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
பணவீக்கம் அதிகரிப்பு
பொதுவாக ஒரு நாட்டின் ரூபாய் மதிப்பு அடிப்படையில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறது. ஆனால் நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் ரூபாய் நோட்டுகளையும் இலங்கை அரசு அச்சடித்து வெளியிட்டுள்ளது.
இதனால் பணவீக்கம் அதிகரித்து மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பால் எரிபொருள் வரையில் அனைத்தும் விலை ஏறி இருக்கும் நிலையில் வெறும் இரண்டு வேலை மட்டுமே சாப்பிடுவதாக இலங்கை மக்கள் வேதனை கண்ணீர் வடிக்கிறார்கள்.
இலங்கையில் ஏற்கனவே 50 லட்சத்திற்கும் மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளதாக உலக வங்கி கணக்கிட்டுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவின் வலையில் சிக்கிய இலங்கை
உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கும் நிலையில் அரிசி சர்க்கரை மற்றும் தானியங்கள் பதுக்கி வைக்கப்படுவதை தடுக்கும் வகையிலும் அரசு நிர்ணயித்த விலையில் அவற்றை விற்பனை செய்யவும் ராணுவத்திற்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இந்த நிலைமைக்கு காரணம் அது சீனாவின் கடன் வலையில் சிக்கியதாக பொருளாதார நிபுணர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சீனாவுடன் நெருங்கிய உறவு காரணமாக அமெரிக்கா ஐரோப்பா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் உதவிகள் இலங்கைக்கு இல்லாமல் போனதாகவும் தற்போது நாடு திவாலாகும் நிலையை தடுக்க இந்தியா போன்ற நாடுகளின் உதவியை நோக்கி இலங்கை உள்ளது என கூறப்படுகிறது.