இலங்கை ஆட்சியாளர்கள் சீனசார்பு கட்சி அதிகாரத்தை நோக்கி இலங்கை அரசியலை நகர்த்துகிறார்களா? – பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!
இலங்கை அரசியலில் சீன கொம்யூனிசத்தின் செல்வாக்கு அதீதமாக வளர்வதாக புலமையாளர் தரப்பிலும் ஊடகவியலாளர் மத்தியிலும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உரையாடலிலும் வெளிப்படுத்தப்படுகின்றது. அத்தகைய விம்பம் இலங்கைக்கு பொருத்தப்பாடு உடையதா? என்பதையும், அவ்வாறெனில் சீன கொம்யூனிசப்பண்பாடு தற்போது அடைந்துள்ள உண்மையான வடிவமும் புரிந்து கொள்ளுதல் வேண்டும். அத்தகைய புரிதலை தரும் நோக்கிலேயே இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சீனா மாவோ சேதுங் தலைமையில் கார்ள் மாக்ஸின் சிந்தனைகளை ஆசியமயப்படுத்துவதில் வெற்றி கண்டது. ஆனால் அத்தகைய சோசலிச மரபு படிப்படியாக கொம்யூனிச சர்வதிகாரத்தை மாவோ சேதுங்-இன் கலாசாரப்புரட்சியோடு அடைந்தது. ஆனால் டெங் சியாவொப்பிங் அத்தகைய சோசலிச சர்வதிகார கட்டமைப்பை பொருளாதார நலன்கருதி சந்தை சோசலிச கட்டமைப்பாக வடிவமாக்கினார். அது ஒரு வகையில் மேற்கு முதலாளித்தவத்திற்கு வெற்றிகரமான அம்சமாக காணப்பட்டது. இதனால் மேற்கின் சந்தையும் சீனாவின் சோசலிச சந்தையும் போட்டிபோடும் நிலையொன்று உலகளாவியரீதியில் வளர்ச்சியடைந்தது. அதுவே உலகளாவிய அரசியல் பொருளாதார கட்டமைப்பையும் உருவாக்கியது. இத்தகைய சீனா சோசலிச சர்வதிகார சந்தை கட்டமைப்புடனேயே இலங்கையின் ஆட்சித்தறை நெருக்கமான உறவை வைத்தள்ளது.
இத்தகைய சீனா இலங்கை நெருக்கத்தின் ஆரம்ப புள்ளி சண்முகதாசனின் தலைமையில் உருவாகிய சீன கொம்யூனிஸ்ட் கட்சியின் கட்டமைப்போடு இலங்கையில் செல்வாக்கையும் பரிமாணத்தையும் பெறத்தொடங்கியது. சண்முகதாசனின் சீன சார்பு கொள்கை என்பது சீனாவின் ஆசிய மாதிரி பற்றியது. இலங்கை 1935ஆம் ஆண்டிலிருந்து சோசலிச அரசியல் கட்சி மரபுக்குள் ஈர்க்கப்பட்டதும் சண்முகதாசனின் புரட்சிகரமான சிந்தனைக்கு முக்கிய வேராக அமைந்திருந்தது. சண்முகதாசனின் வழிநடத்தலில் தோன்றி புரட்சிகரமான அணுகுமுறையை பின்பற்றிய றோஹன விஜயவீர சீன கொம்யூனிச மரபின் இரண்டாவது பரம்பரையாக கருதப்பட்டார். அவர் 1971இலும், 1989இலும் முன்னெடுத்த ஆயுத புரட்சி தோல்வியில் முடிந்த போதும் அதுவொரு அரசியல் பொருளாதார புரட்சிகரமான மரபை தோற்றுவித்தது. இதன் மூன்றாவது பரம்பரையாகவும், மேற்கின் சந்தைக்கு நிகரான சர்வதிகார சோசலிச சந்தை பொறிமுறைக்குமான உறவாக காணப்பட்டது. அத்தகைய உறவின் தொடக்க புள்ளி முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாக்கா ஆவார். சண்முகதாசனும் றோஹண விஜயவீரவும் ஆயுதப்போராட்டத்தினூடாக சீன அறிமுகத்தை இலங்கையில் மேற்கொண்ட போதும் ஸ்ரீமாவோ அரசாங்கம் மிதவாத அரசியலூடாக புவிசார் அரசியலை தந்திரோபாயமாக கையாளும் விதத்தில் சீனா-இலங்கை உறவை கட்டமைத்தார். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவிற்கு முன்பே ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியிலிருக்கும் போது அரிசி-இறப்பர் உடன்படிக்கை சீன இலங்கை உறவை அடையாளப்படுத்தியது என்பதுவும் மறுக்க முடியாது.
ஆனால் சோவியத் யூனியனில் சோசலிசம் வீழ்ந்து புதிய உலக ஒழுங்கு மலர்ந்த போது வலுவான தேசங்கள் இலங்கை போன்ற சிறிய நாடுகளை கைவிடும் நிலை ஏற்பட்ட போது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் வாரிசான சந்திரிக்கா பண்டாரநாயக்க சீனா-இலங்கை உறவை இன்னொரு கட்டத்துக்கு எடுத்துச்சென்றார். இதுவும் முழுமையாக அரசியல் மற்றும் பொருளாதார நலனுடன் இசைவுபட்டதாக அமைந்திருந்தது. இதன் வளர்ச்சிப்போக்கை அதி தீவிரமாகவும் நான்காவது பரம்பரை எனவும் அடையாளப்படுத்தக்கூடிய அளவிற்கு சீனா-இலங்கை உறவின் பரிணாமத்தை மிதவாத அரசியலுக்குள்ளிலிருந்த எழுச்சி பெற்ற இன்றைய பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமாகிய மகிந்த ராஜபக்சா தோற்றுவித்தார். இத்தகைய சீனா-இலங்கை உறவு அரசியல் பொருளாதாரமாக மட்டுமன்றி இராணுவமாகவும், கட்சி சர்வதிகாரமாகவும் வரைமானம் எடுக்கின்ற ஒன்றாக விளங்குகிறது. இலங்கையினுடைய அரசியல் சூழலை தனிக்கட்சி அரசியலுக்குள்ளால் நகர்த்தவும், பொது நிர்வாக இயந்திரத்தின் மீது இராணுவ செல்வாக்கை பலப்படுத்தவும் திட்டமிடுகிறது. இத்தகைய திட்டமிடல், சீனா சார்பு அரசியல் பொருளாதார இராணுவ, கட்சி பரிணாமம் என நீண்டதொரு வளர்ச்சிப்போக்கை தொடக்கி உள்ளது. இதற்கு எதிராக எழுந்துள்ள அலைகள் பலவீனமாக அமைந்திருப்பதோடு உலகளாவிய சீனாவின் அதிகார சமநிலைக்கு முன்னால் அதிக நெருக்கடிக்கும் அத்தகைய அணிகள் தள்ளப்பட்டுள்ளன.
அதுமட்டுமன்றி சீனாவை விமர்சிக்கும் அல்லது எதிர்க்கும் அணியினர்களில் பிரதானமானவர்கள் புரட்சிகர ரோஹன விஜயவீர-இன் பாசறையில் வளர்ந்த விஜயவீரா-இன் மரணத்திற்கு பின்னர் மிதவாத அரசியலை அடையாளப்படுத்திய ஜே.வி.பி-இனர். ஆயினும் அவர்களது எதிர்ப்புவாதம் முழுமையான வடிவத்தை கொண்டதா என்பது சந்தேகத்திற்குரியது. இலங்கையில் சீனாவின் காலணித்துவம் பற்றி விமர்சனம் செய்யும் ஜே.வி.பி-இனர் சீன கொம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் கொம்யூசிஸ்ட் கட்சியின் சாதனைகளை அங்கீகரித்தமை சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளது. அதேபோன்றே ஐக்கிய தேசிய கட்சியும் சீனா மீதான விமர்சனங்களை அதீதமாக கொண்டிருந்த போதிலும் 1952 றப்பர்-அரிசி உடன்படிக்கையில் தொடங்கி ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி தலைவராக இருக்கின்ற போது சீனாவிற்கு அழைத்து செல்லப்பட்ட போதும் நல்லாட்சி அரசாங்கம் பதவியில் இருக்கின்ற போது சீனா மேற்கொண்ட ஒரே சுற்று ஒரே பாதைக்கான ஆரம்ப விழாவில் கலந்து கொண்டமையும் அம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கும் உடன்பாட்டில் ஒப்பமிட்டதனூடாகவும் அதன் எதிர்ப்பு வாதத்தின் நம்பிக்கை பலவீனம் என்பது தெளிவாகிறது. தமிழ்த்தரப்பை பொறுத்தவரை அது தனது தனிப்பட்ட அரசியல் நலனுக்காகவும், இந்திய-அமெரிக்க நட்புக்காகவும் வடிவமைக்கப்பட்டதொன்றாக தெரிகிறது.
தென்னிலங்கை புத்திஜீவிகளும் பெருமளவு ஊடகப்பரப்பில் செயற்படுவோரும் சீன-இலங்கை உறவை வளர்ச்சிக்குரியதொன்றாகவே கருதுகிறார்கள். குறிப்பாக அத்தகைய உறவை புவிசார் அரசியலாகவும் பூகோள அரசியலாகவும் புவிசார் பொருளதாரமாகவும் கணிப்பிட்டு செயற்படுகின்றனர். இவை அனைத்தும் இலங்கைக்குரிய ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுமென கருதுகின்றனர். அதேநேரம் ஒரு சில ஆய்வாளர்களும் ஊடகப்பரப்பினரும் நீண்ட கால நோக்கில் சீன-இலங்கை உறவு ஆபத்தானதாக அமைந்துவிடுமா? என சந்தேகிக்கின்றார்கள். அனால் யதார்த்தமாக நோக்கினால் இலங்கையின் ஆட்சியாளர்கள் சீன – இலங்கை உறவை நீண்ட பரிமாணமிக்கதொன்றாக உருவாக்க திட்டமிடுகிறார்கள். அதுவே இலங்கையின் இறைமையையும் பொருளாதார செழிப்பையும் உலகளாவிய நெருக்கடியிலிருந்து மீள உதவுமென கருதுகின்றனர். இத்தகைய ஆட்சியாளர்கள் மேற்குலகத்தையும் இந்தியாவையும் கையாளும் பொறிமுறையே சீனாவின் உறவு வெற்றிகரமான முகமென கருதுகிறது. அமெரிக்காவையும் இந்தியாவையும் கையாளும் விதத்திலேயே திருகோணமலை துறைமுகத்தையும் மேற்கு முனையத்தையும் வடக்கு கிழக்கில் இந்தியாவின் பிரசன்னத்தையும் முகாமை செய்து வருகிறது. சீனாவுடன் 99 ஆண்டு கால குத்தகைக்கு உடன்பட்ட இலங்கை ஆட்சியாளர்கள் அமெரிக்காவோடு 5 வருட குத்தகைக்கு மட்டுமே உடன்பட்டுள்ளார்கள். தென்னிலங்கை ஆட்சியார்களின் கணிப்பு சரியாக அமையுமாயின் ஏறக்குறைய 5-10 ஆண்டுகளுக்குள் இலங்கை மீதான அமெரிக்க இந்தியாவின் செல்வாக்கு முற்றாக நீங்கிவிடுமென கருதுகின்றது. காரணம் சீனாவும் – இலங்கையும் நிரந்தரமான நட்பு நாட எனும் விம்பம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இலங்கையில் சீன சார்பு வளர்ச்சி நிலை என்பது ஆட்சியில் உள்ள மிதவாத அரசியல் தலைமைகளிடம் இராணுவரீதியிலான கட்டமைப்பையும் சர்வதிகார ரீதியிலான கட்சி கட்டமைப்பையும் விஸ்தரிப்பதற்கான முனைப்போடு அணுகப்பட்டு வருகிறது. பொருளாதாரம் அல்லது சந்தை பொருளாதாரம் அத்தகைய விம்பத்துக்கு ஒத்துழைப்பை கொடுக்கும் அங்கமாகவே பார்க்கப்படுகிறது. இது இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருத்தப்பாடுடைய நிலையாகும். சீனா இலங்கைக்குள் பொருளாதார ஒத்தழைப்பை முதன்மைப்படுத்த இலங்கை சீனாவுக்குள் கட்சி அரசியலையும் பொருளாதாரத்தையும் இராணுவ பரிமாணத்தையும் தேடுகின்றது.
-அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை