இலங்கை நோக்கிவந்துகொண்டிருக்கும் சீன உளவுக்கப்பல் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என இந்தியா குற்றசாட்டினை முன்வைத்துள்ள நிலையில், இலங்கையில், சீனா ஆதிக்கம் செலுத்துவதை அமெரிக்காவும் விரும்பவில்லை என கூறப்படுகின்றது.
இந்நிலையில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வழமையான செயற்பாடுகளில் தலையிடாமல் இந்த விடயத்திலிருந்து தொந்தரவு செய்வதை இந்தியா நிறுத்த வேண்டும் என, சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் இந்தியாவுக்கு கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேசமயம் ஓகஸ்ட் 11 முதல் 17 வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த திட்டமிடப்பட்ட சீன விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆராய்ச்சிக் கப்பலான ‘யுவான் வாங் 5’ வருவதை ஒத்திவைக்குமாறு பீஜிங்கை இலங்கை கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கை இந்தியப் பெருங்கடலில் ஒரு போக்குவரத்து மையமாக உள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளின் பல அறிவியல் ஆய்வுக் கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில் மறுவிநியோகத்திற்காக நிறுத்தப்படுகின்றன.
இவ்வாறான நிலையில் “சீனா எப்பொழுதும் ஆழ் கடல்களில் செல்வதற்கான சுதந்திரத்தைப் பயன்படுத்துகிறது மற்றும் கடலோர நடுகளின் அதிகார வரம்பிற்கு அவர்களின் கடல்களுக்குள் அறிவியல் ஆய்வு நடவடிக்கைகளுக்கு முழுமையாக மதிப்பளிக்கிறது என்றும் , சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறியுள்ளார்.