பனாமுர பொலிஸ் சிறைக்கூண்டில் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையின் பின்னர், மேலதிக பரிசோதனைக்காக சடலத்தின் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பனாமுர, வெலிபோதயாய பகுதியைச் சேர்ந்த 38 வயதான இந்திக்க ஜயரத்ன என்பவரே நேற்று பனாமுர பொலிஸ் சிறைக்கூண்டுக்குள் உயிரிழந்திருந்தார்.
கடந்த 12ஆம் திகதி தம்மை தந்தை தாக்கியதாக 14 வயதுடைய மூத்த மகள் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேக நபரின் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து சந்தேக நபரின் மரணத்தின் போது கடமையாற்றிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை பணி இடைநிறுத்தம் செய்துள்ளதாக பனாமுர பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரின் பிரேத பரிசோதனை இன்று எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட சட்ட வைத்திய அதிகாரி முனசிங்க கமகே தலைமையில் மேற்கொள்ளப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக சடலத்தின் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் குடும்பத்தகராறு காரணமாக இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபருக்கு எதிராக மனைவி மற்றும் பிள்ளைகளை தாக்கியமை தொடர்பில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவரின் உடலை ஏற்க அவரது மனைவி மறுத்துவிட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சகோதரி சடலத்தை பெற்றுக்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.