சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி உட்பட இரு பொலிசாரும், இளைஞன் ஒருவரும் தகராறில் ஈடுபட்ட காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இரத்தினபுரி, கிரியெல்ல வீதியின் கோரக்கஎல பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது
இந்நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட பொலிசார், கிரியெல்ல நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அவர்களைப் பின்தொடர்ந்து வந்த மற்றுமொரு கார் முந்திச் செல்ல முயன்றுள்ளது. இதன்போது பொலிஸ் அதிகாரிக்கும் இளைஞருக்கும் இடையே சர்ச்சை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சீருடை அணிந்திருந்த மூன்று பொலிஸ் அதிகாரிகள், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாகக் குற்றம் சாட்டி, மற்ற காரை ஓட்டிச் சென்ற இளைஞனின் கழுத்தைப் பிடித்து, பொலிஸ் ஜீப்பை நோக்கி அழைத்துச் செல்லும் காணொளி வெளியாகியுள்ளது.
இதன்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் அந்த இளைஞனின் தலையில் அடித்து அழைத்து செல்ல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை குறித்த இளைஞன் குடிபோதையில் இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.