சர்வதேச மகளிர் தினமான இன்று (8) மாலை பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய மாணவியொருவர் கூரிய கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பதுளை மாவட்டம், ஹாலிஎல உடுவர தோட்டத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் தர்மராஜ் லிபியா என்ற 18 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடுவர தோட்டத்தில் வசிப்பவர் என கூறப்படும் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் சந்தேக நபரை கைது செய்வதற்கு நான்கு பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தவுள்ளதாக பதுளை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்ல தெரிவித்தார். உயிரிழந்தவர் ஹாலிஎல தமிழ் மகாவித்தியாலய மாணவியாவார்.
பாடசாலை முடிந்து பேருந்தில் வீடு திரும்பிய மாணவி, உடுவரையில் இறங்கினார். வீடு நோக்கி வலஸ்பெத்த வீதியில் நடந்து செல்லும் போது, இளைஞன் அவரது தலையில் பலமுறை கோடாரியால் அடித்து கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த இளைஞன் கடந்த பல மாதங்களாக மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்தார். எனினும், மாணவி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த வருடம் மாணவியின் தாயாரை சந்திக்க வந்துள்ளார்.
அப்போது, மாணவியின் அண்ணன் மீது கோடாரியால் தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்