சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து இலங்கை விலகினால், மத்திய வங்கிகள் பல பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
29.12.2023 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
உடன்படிக்கையில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவது சர்வதேச அழுத்தங்களுக்கு வழிவகுக்கும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேசத்தின் ஆதரவைப் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை இலங்கை தொடர்வது மிகவும் முக்கியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியின் அடிப்படையில் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் கடன் சலுகைகளையும் உத்தரவாதங்களையும் வழங்கியுள்ளதாக நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
அடுத்த நான்கு வருடங்களில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கேற்ப கொள்கைகளை மாற்றும் திறன் எந்தவொரு அரசாங்கத்திற்கும் உண்டு என கலாநிதி வீரசிங்க ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
இலங்கை நிதியத்தின் வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பது இலங்கையின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தை தொடர விரும்பாத தரப்பினரும் அதற்கான தெரிவை அறிவிக்க வேண்டும் . அதிகரித்துள்ள பொருட்களின் விலைக்கு முகங்கொடுக்க வேண்டும்.
அதனுடன் ஒப்பிடுகையில் வருமானத்தை அதிகரிப்பதுதான் சிறந்தது எனவும், நீண்ட கால அடிப்படையில் பொருட்களின் விலை குறைக்கப்படும் என யாராவது கூறினால் அது பொய்யானது என மேலும் தெரிவித்துள்ளார்.