உக்ரைனுடனான போரில் இணைய கூடுதலாக படையினருக்கு புடின் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு ஆண்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.
தப்பிக்கும் ரஷ்யர்கள்
ஜோர்ஜியாவின் எல்லையில், போரில் பங்கேற்காமல் தப்பிக்க முயற்சிக்கும் ரஷ்யர்கள் இடம்பெற்ற வாகனங்களின் நீண்ட வரிசை காணப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அப்பர் லார்ஸ் சோதனைச் சாவடியில் கார்களின் வரிசை சுமார் 5 கிமீ (3 மைல்கள்) தூரத்துக்கு இருந்ததாக கூறப்படுகின்றது. எனினும் இந்த தகவல்களை மறுத்துள்ள ரஷ்யா, நாட்டை விட்டு ஆண்கள் வெளியேறுவது தொடர்பாக வரும் தகவல்கள், மிகைப்படுத்தப்பட்டவை என தெரிவித்துள்ளது.
விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகள்
அதேசமயம் விசாவிற்கு விண்ணப்பிக்காமல் ரஷ்யர்கள் நுழையக்கூடிய சில அண்டை நாடுகளில் ஜோர்ஜியாவும் ஒன்றாகும். ரஷ்யாவுடன் 1,300 கிமீ (800 மைல்) எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஃபின்லாந்து செல்வதானால் ரஷ்யர்களுக்கு விசா தேவை.
இந்த நிலையில், ஒரே இரவில் அந்த நாட்டுக்கு வரும் மக்களின் கூட்டம் அதிகமாகியிருப்பதாக ஃபின்லாந்து கூறுகிறது. ரஷ்யாவில் இருந்து பிற நாடுகளுக்கு விமானம் மூலம் எளிதாக செல்லக் கூடிய இடங்களாக இஸ்தான்புல், பெல்கிரேட் அல்லது டுபாய் கருதப்படுகின்றன.
இராணுவ அணி திரட்டல் அறிவிக்கப்பட்ட உடனேயே இந்த நாடுகளுக்கு செல்வதற்கான விமான பயணச்சீட்டு விலை உயர்ந்துள்ளதுடன் சில இடங்களுக்கு பயணச்சீட்டுகள் முற்றிலுமாக விற்றுத் தீர்ந்தன.
உக்ரைனுடனான போரில் பணியாற்ற மூன்று லட்சம் பேரை அழைக்க ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளின் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.