பரபரப்புக்கு பஞ்சமில்லாத சர்ச்சை சுவாமி நித்தியானந்தாவின் பெங்களூரு ஆசிரமத்தில் தனக்கு தகாத முறையில் தொல்லை தரப்பட்டதாக வெளிநாட்டு பெண் ஒருவர் மீண்டும் புகார் தெரிவித்துள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமறைவாகவுள்ள நித்தியானந்தா பாலியல் புகார், ஆள் கடத்தல் வழக்குகள் எனப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிப் பிரபலமானவர். நித்தியானந்தா மீது ஏராளமான புகார்கள் நிலுவையில் இருக்கின்றன.
நித்தியானந்தா தற்போது கைலாச என்கிற தனி நாட்டை உருவாக்கி, அங்கு தனது சீடர்களுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் அவர், அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இதனிடையே, கனடா நாட்டை சேர்ந்த இளம்பெண் சாரா லேன்ரி, நித்தியானந்தா தன்னை மூளைச் சலவை செய்து வைத்திருந்ததாகவும், அவரது குருகுலத்தில் சிறுவர், சிறுமியர் கடுமையாக துன்புறுத்தப்பட்டு வருவதாகவும், தகாத முறையில் தொந்தரவு செய்ததாகவும் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார்.
இதுகுறித்த புகாரை இ-மெயில் மூலம் பெங்களூரு பிடதி காவல் நிலையத்திற்கு அவர் அனுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள பிடதி காவல்துறையினர், இதுபோன்ற இ-மெயில் புகார்களை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்தியாவின் ஏதாவது ஒரு காவல்நிலையத்தில் நேரடியாக வந்து புகார் அளிக்குமாறு அப் பெண்ணிடம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சாரா லேன்ரி, பிடதி மற்றும் ராம்நகர காவல்துறையினர் புகாரை ஏற்க ஏன் மறுக்கின்றனர் என கேள்வி எழுப்பியுள்ளார்.
கொஞ்ச நாட்களாகவே நித்தியானந்தா தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகாத நிலையில் தற்போது கனடா பெண்ணால் மீண்டும் அவர் பேசுபொருளாகியுள்ளார்.