மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 22 கம்பனிகள் ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கி வருகின்றன. ஆறு கம்பனிகள் தான் இழுத்தடிப்பு செய்கின்றன. இப்பிரச்சினைக்கு விரைவில் உரிய பொறிமுறை உருவாக்கப்படும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“நானும், நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் உபதலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் தமிழகம் சென்றிருந்தோம். தமிழக முதல்வரைச் சந்தித்துப் பல விடயங்களைத் தொடர்பில் கலந்துரையாடினோம்.
குறிப்பாக மலையக மாணவர்களுக்குத் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் 100 புலமைப்பரிசில்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்தோம். அண்மையில் தமிழகத்தில் தமிழர் மாநாடு நடைபெற்றது. இதற்கு இந்திய வம்சாவளி மக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றனர். இது பற்றியும் பேசினோம். மீனவர் பிரச்சினை சம்பந்தமாகச் செந்தில் தொண்டமான் கருத்துகளை முன்வைத்திருந்தார்.
அதேவேளை, எமது மக்களுக்கு நாம் எதை செய்தாலும் சிலர் இன்று விமர்சிக்கின்றனர். கோதுமை மா நிவாரணம் வேண்டும் என்றனர். அதை பெற்றுக்கொடுத்தோம்.
தற்போது அதற்கும் விமர்சனம். காங்கிரஸை நோக்கி ஒரு விரல் நீட்டும்போது எஞ்சிய நான்கு விரல்களும் அவர்கள் பக்கம்தான் உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது. நாம் மக்களுக்குச் சேவையாற்றவே வந்தோம்.
எனவே, முடியுமானால் ஒத்துழைப்பு வழங்குங்கள். இல்லையேல் ஒதுங்கி நில்லுங்கள். நல்லாட்சியின்போது தேயிலை சபை ஊடாக 50 ரூபாவைக்கூட வாங்கிக்கொடுக்க முடியாதவர்கள் இன்று எமது முயற்சியைச் சாடுகின்றனர்.
22 கம்பனிகளில் 16 கம்பனிகள் ஆயிரம் ரூபாவை வழங்குகின்றன. 6 கம்பனிகளே இழுத்தடிக்கின்றன. இதற்கு உரிய தீர்வு காணப்படும். பெருந்தோட்டத்துறை அமைச்சருடன் பேச்சு நடத்தப்படும். அவரால் முன்வைக்கப்பட்டுள்ள பொறிமுறை தொடர்பில் ஆராயப்படும்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.