முல்லைத்தீவு – துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம் கிழவன்குளம் பகுதிகளை சேர்ந்த பாடசாலை மாணவர்களை ஏ_ 9 வீதியில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மாணவர்களை ஏற்றாது செல்வதால் பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு- பெற்றோர் ஆதங்கம்
இது தொடர்பாக வடமாகாண ஆளுநர், வடமாகாண போக்குவரத்து துறை சார்ந்த உயர் அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலருக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர் ஆதங்கம் வெளியிடப்பட்டுள்ளனர்.
அதோடு பரீட்சை நடைபெறும் இந்த காலப்பகுதியிலும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் பேருந்துகள் ஏற்றாமல் செல்வதால் வீதியை மறித்து பாரிய போராட்டம் ஒன்றை செய்தபோது பொலிசார் அது தொடர்பில் மாங்குளம் நீதிமன்றுக்கு கொண்டு சென்று வடமாகாண போக்குவரத்து பிரிவினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
இலங்கை போக்குவரத்து சபை உயர் அதிகாரிகளால் மாணவர்களை பருவகால சிட்டை பெறுமாறு ஆலோசனை வழங்கப்பட்டதைஅ அடுத்து மாணவர்கள் பருவகால சிட்டையை பெற்றும் எந்தவித முன்னேற்றமும் இல்லை எனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
மாறாக பருவகால சிட்டை பெற்ற பின்னர் மாணவர்களை ஏற்றாமல் பேருந்துகள் செல்வது அதிகரித்திருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் இன்று(13) காலை 8.12 மணிவரை மாணவர்களை எந்த பேருந்துகளும் ஏற்றாமல் சென்ற நிலையில் மாணவர்கள் தவித்து நின்ற நிலையில் , மாங்குளம் போக்குவரத்து பொலிசார் அழைக்கப்பட்டு மாணவர்கள் பேருந்தில் ஏற்றிவிடப்பட்டுள்ளனர் .
அதேசமயம் பேருந்து நடத்துனர் கூட பொலிசாருடன் வாக்குவாதப்பட்டே மாணவர்களை ஏற்றி செல்கின்றனர். எனவே இந்த நிலைக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் இதனால் பாதிக்கப்படுவதாகவும் பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.