மல்வத்துஹிரிபிட்ட, பட்டேபொல பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்யச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் , கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (11) உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை காலை மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று சந்தேகநபர் ஒருவரை கைது செய்யச் சென்ற போது ஏற்பட்ட மோதல் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியை பறிக்க முயற்சித்துள்ளனர். இதன்போது ,பொலிஸ் உத்தியோகத்தர் சுடப்பட்டதோடு, சந்தேக நபர் துப்பாக்கியுடன் தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவத்தில் , லுனுகம பிரதேசத்தை சேர்ந்த 51 வயதான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிங்கிரிய, பொலவத்தையில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸ் சார்ஜன்டிற்கு சொந்தமான ரிவோல்வர் ரக துப்பாக்கி, 9அஅ ரவைகள் 03 மற்றும் சந்தேகநபர் வந்த முச்சக்கர வண்டி என்பன பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேவேளை சந்தேகநபரை மறைப்பதற்கு உதவிய பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.