நேபாளத்தின் காத்மாண்டு ஊடாக போலியான இலங்கை கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி பிரித்தானியாவிற்கு செல்ல முயன்ற இலங்கைப் பிரஜைகள் இருவர் கைதாகியுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றைய தினம்(31) குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் குறித்த நபர்கள் கைதாகியுள்ளனர்.
குறித்த நபர்களில் ஒருவர் மட்டக்களப்பை (Batticaloa) வசிப்பிடமாகக் கொண்ட 39 வயதுடையவர் .
நேபாளத்தின் காத்மாண்டுக்கு செல்லவிருந்த இந்தியன் எயார்லைன்ஸின் AI-282 விமானத்தில் செல்வதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் அனைத்து விமான அனுமதிகளையும் முடித்துவிட்டு, குடியேற்ற விஷயங்களுக்காக குடிவரவு அதிகாரிகளிடம் வந்தபோது, அவரது சந்தேகத்திற்குரிய நடத்தையை கவனித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பின்னர், அவரது பயணப்பொதிகளை ஆய்வு செய்த போது, அவரது சுயவிபரங்கள் உள்ளிட்ட புகைப்படத்துடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி இலங்கைக் கடவுச்சீட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரிட நடத்தப்பட்ட விசாரணையில், இதேபோன்று தயாரிக்கப்பட்ட போலி இலங்கை கடவுச்சீட்டை தன்னுடன் வைத்திருந்த நபர் ஒருவர் அனைத்து விமான நிலைய அனுமதிகளையும் முடித்துவிட்டு இந்திய விமானத்தில் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.