பிரிமா நிறுவனத்தின் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை இன்று முதல் 40 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அந்த நிறுவனம் நாடு முழுவதும் உள்ள தனது விற்பனை முகவர்களுக்கு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் விற்பனை முகவர்களுக்கு தேவையான கோதுமை மா தொகையை கொள்வனவு செய்யும் ஒரு கிலோ கிராமுக்கு மேலதிகமாக 40 ரூபாயை வைப்புச் செய்யுமாறு நிறுவனம் விற்பனை முகவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது.
இந்த புதிய விலை அதிகரிப்புடன் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் சில்லறை விலை 250 ரூபாய் வரை அதிகரிக்கும் என விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், 450 கிராம் பாண் ஒன்றின் விலை மேலும் 20 ரூபாவால் அதிகரிக்கப்படும் எனவும் ஏனைய கோதுமை மா சிற்றுண்டிகள் 10 ரூபாவால் அதிகரிக்கும் என வெதுப்பக உரிமையளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது 450 கிராம் பாண் 110 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன் அதன் விலை 130 ரூபாக அதிகரிக்கும். கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதால், வெதுப்பக உணவு தயாரிப்புகளுக்கான ஏனைய மூலப் பொருட்களின் விலைகளும் 70 வீதமாக அதிகரித்துள்ளது எனவும் வெதுப்பக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
அதேவேளை செரண்டிப் கோதுமை மாவின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தனது விற்பனை முகவர்களுக்கு அறிவித்துள்ளது.