இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் நிலவும் உள்ளக முரண்பாடு ஒன்று, ஜனாதிபதி கோட்டாபய முன்பாக வெளிப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கத.
ஜனாதிபதி கோட்டாபயவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழ் அரசு கட்சி, புளொட் என்பனவற்றிற்கும் இடையில் நேற்று நடந்த கலந்துரையாடலில் இந்த சம்பவம் நடந்தது.
இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் நடக்கும் கலந்துரையாடல்கள் பலவற்றில், எம்.ஏ.சுமந்திரனின் சில நடவடிக்கைகளை, அணுகுமுறைகளை சுட்டிக்காட்டி, கண்டித்து வருபவர் சி.சிறிதரன்.
குறிப்பாக, தன்னை மையப்படுத்திய சுமந்திரனின் நடவடிக்கைகள், தானே அனைத்தையும் செய்வதை போன்ற தோற்றத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை கட்சியின் உள்ளக கூட்டங்களில் சிறிதரன் சுட்டிக்காட்டி வந்துள்ளார்.
இப்படியான கூட்டமொன்றில், ‘நாங்கள் என்றே சிந்திக்க மாட்டீர்களா?…நான், நான் என்று மட்டுமா சிந்திப்பீர்கள்?’ என்றும் அதட்டலாக கேட்டிருந்தார்.
இப்படியான கேள்விகள் எழுப்பப்படும் சமயங்களில் எம்.ஏ.சுமந்திரன் பதிலளிப்பதில்லை. நேற்று ஜனாதிபதியுடன் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கு பேசுவதற்கான சூழலை சுமந்திரன் விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு முன்னதாக நடந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில், ‘அனைவரும் உங்கள் உங்கள் மாவட்டங்களில் நடக்கும் பிரச்சனைகளை, பேச வேண்டிய விடயங்களை தயார் செய்து கொண்டு வந்து பேசுங்கள்’ என இரா.சம்பந்தன் குறப்பிட்டிருந்தார்.
ஆனால், ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் அதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. தமிழ் அரசு கட்சியின் எம்.பிக்கள் ஏதாவது பிரச்சனையை குறிப்பிட ஆரம்பிக்க, உடனேயே சுமந்திரன் தலையிட்டு, அந்த விடயத்தை ஜனாதிபதிக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார்.
அதாவது ஒரு விடயத்தின் முதல் வரியை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருப்பவர்களாக தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். தலைவர் மாவை சேனாதிராசாவிற்கும் அதுதான் கதி. சாணக்கியன் பேசும் போது மட்டும் சுமந்திரன் குறுக்கீடு செய்யவில்லை.
தமிழில் பேசும் உறுப்பினர்களிற்கும் வாய்ப்பாக, மொழிபெயர்ப்பு வசதியும் செய்யப்பட்டிருந்தது. என்றாலும், சுமந்திரனின் தலையீடு அதிகமாக – அந்த குழுவிற்கே தான் தலைவர் என்பதை போல நடந்து கொண்டிருந்தார்.
சி.சிறிதரன் இரண்டு மூன்று முறை பேச முற்பட்ட போதும், அவருக்கும் அதே நிலையே ஏற்பட்டது, இதனால் அவர் கோபமடைந்து விட்டார்.
மீண்டும் அவர் பேச ஆரம்பிக்க, வழக்கம் போல சுமந்திரன் அதன் தொடர்ச்சியை ஆரம்பித்து ஏனை நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறுமைப்படுத்தினார்.
இதை அவதானித்த சிறிதரன் கடுப்பாகி சற்று உரத்த குரலில் ‘எங்களையும் கொஞ்சம் கதைக்க விடுகிறீர்களா?’ என காட்டாக கேட்டார்.
இதன் பின்னரே சுமந்திரன் அடங்கினார், சுமந்திரன் – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நட்பால் உருவான இக் கலந்துரையாடலில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.