இலங்கைக்கு உதவும் வகையில் மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் (எம்.சி.சி.) நிறுவனத்திடம் இருந்து தற்போது எந்த நிதியுதவி ஏற்பாடுகளும் இல்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஏற்கனவே குறித்த திட்டத்தை இலங்கைக்கு வழங்கியபோதும், அதனை ஏற்றுக்கொள்ளாமல் ஏமாற்றமளித்தது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தூதர் ஜூலி சுங் கூறியுள்ளார் என்று கொழும்பின் ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
எதிர்காலத்தில் எப்போதாவது இந்த நிதியுதவி திட்டம் இலங்கைக்கு வழங்கப்படலாம். எனினும் தற்போதைக்கு எந்த நிதியுதவியும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற ஆரம்பப் பகுதியில் 4 பில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த நிதித்திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்கா தொடர்ந்தும் வலியுறுத்தி வந்ததுள்ளது. எனினும் அதனை கோட்டாபய நிராகரித்திருந்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை இந்த திட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கியிருந்தபோதும், அதுவும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டது.