கொழும்பு துறைமுக நகரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட மெரினா (marina) நடை பாதையை அண்மித்த பகுதியில் புகைப்படம் எடுத்தல் மற்றும் காணொளி பதிவு நடவடிக்கைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கழம்போ போர்ட் சிட்டி (தனியார்) நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, 2-5 பேர் பங்கேற்புடன் குறித்த பின்னணியைப் பயன்படுத்தி 3 மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரத்திற்குள் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக புகைப்படம் எடுப்பதற்கு 30, 000 ரூபா கட்டணமாக வசூலிக்கப்படும்.
மேலும், 1 – 3 மணித்தியாலங்களுக்குள் 6 – 10 பேர் படப்பிடிப்பில் ஈடுபட்டால், 50,000 ரூபா கட்டணமாக அறவிடப்படுகிறது. அத்துடன், 10 க்கும் மேற்பட்டவர்கள் மூன்று மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரத்திற்குள் படப்பிடிப்பில் ஈடுபட்டால் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும் என குறித்த கட்டணப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 10 பேருக்கு மேல் வர்த்தக நோக்கில் படப்பிடிப்பில் ஈடுபட்டால், மூன்று மணித்தியாலங்களுக்கு குறைவான நேரத்துக்காக கட்டணத்தை பேசித் தீர்மானிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 10 பேருக்கும் குறைவான எண்ணிக்கையிலானோர், ஒன்று முதல் 3 மணித்தியாலங்களுக்குள் படப்பிடிப்பில் ஈடுபடுவதாயின் ஒரு இலட்சம் ரூபா கட்டணமாக வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டு வாரங்களுக்கு முன்னர் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர மெரினா நடை பாதை எவ்வாறு சேதமடைந்துள்ளதை காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
அப்புகைப்படங்களினூடாக மெரினா நடை பாதையில் உள்ள சில தரை பலகைகள் உடைந்திருப்பதை காணமுடிகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மெரினாவுக்கு வருகைதந்த மக்களால் பெருந்தொகையைான பிளாஸ்டிக் போதத்தல்கள், உறிஞ்சல் குழாய்கள் என்பவற்றை காண்பிக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, கொழும்பு துறைமுக நகருக்கு வருகை தருபவர்கள் அதனை சூழவுள்ள கடற்பகுதியில் கழிவுகளை கொட்டினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கின்றது.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர, துறைமுக நகரை சூழவுள்ள கடற்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கும் வகையில் போர்ட் சிட்டி நிறுவனத்துடன் இணைந்து வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன், கொழும்பு துறைமுக நகர மெரினா பாதையையும் பிரதேசத்தையும் அதனைச் சூழவுள்ள கடற்பரப்பையும் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்குமாறும் அப்பகுதிக்கு வருகை தரும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.