கொவிட் தொற்று காலப்பகுதியில் இரு கப்பல்களை தயாரித்து நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தருவதற்கு வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பில் கொழும்பு டொக்யார்ட் கப்பல் கட்டும் நிறுவனத்தின் (Colombo Dockyard PLC) தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று (25) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
35 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை கொண்ட ´அல்கா´ மற்றும் ´ஷான் அல் அராக்´ ஆகிய இரு கப்பல்கள் கொழும்பு டொக்யார்ட் கப்பல் கட்டும் நிறுவனத்தினால் கட்டப்பட்டதுடன், அவ்விரு கப்பல்களும் எதிர்வரும் 4ஆம் திகதி அந்நாட்டில் வைத்து ஈராக் அரசாங்கத்திற்கு கையளிக்கப்படவுள்ளது.
அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி கப்பல் பழுபார்ப்பு நடவடிக்கைகளுக்காக பிராந்திய கிளையொன்றை எதிர்வரும் 2ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை மையமாகக் கொண்டு முதல் முறையாக ஆரம்பிப்பதாக கொழும்பு டொக்யார்ட் கப்பல் கட்டும் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி D.V.அபேசிங்க இதன்போது தெரிவித்தார்.
திருகோணமலைக்கு மேலதிகமாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மையமாகக் கொண்டு தற்போது காணப்படும் அலுவலகத்தின் ஊடாக தமது சேவையை எதிர்காலத்தில் விரிவுபடுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
பிரான்சின் ஒரேஞ்ச் மெரைன் நிறுவனத்திற்காக உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய கப்பலொன்று கட்டப்பட்டு வருவதுடன், அது கொழும்பு டொக்யார்ட் கப்பல் கட்டும் நிறுவனத்தினால் கட்டப்படும் இரண்டாவது பெரிய கப்பலாகும். அவ்வேலைத்திட்டமானது 45 மில்லியன் அமெரிக்க டொலராகும். இதற்கு மேலதிகமாக நோர்வே அரசாங்கத்திற்காக சுற்றுச்சூழல் நட்புடன் கூடிய 6 கப்பல்கள் கொழும்பு கப்பல் கட்டும் நிறுவனத்தினால் கட்டப்பட்டு வருகின்றன.
இக்கப்பல்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கொழும்பு டொக்யார்ட் கப்பல் கட்டும் நிறுவனம் இன்று பிரதமருக்கு உத்தியோகப்பூர்வமாக அழைப்பு விடுத்தது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு பலமாக விளங்கி கொழும்பு டொக்யார்ட் கப்பல் கட்டும் நிறுவனம் 2021ஆம் ஆண்டில் 100 மில்லியன் அமெரிக்க டொலரையும், 2022ஆம் அண்டில் 120 மில்லியன் அமெரிக்க டொலரையும் வருவாயாக ஈட்டுவதற்கு எதிர்பார்க்கிறது.
திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை பிராந்திய கிளைகள் ஊடாக மேலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் இதன்போது கொழும்பு டொக்யார்ட் கப்பல் கட்டும் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கொழும்பு டொக்யார்ட் கப்பல் கட்டும் நிறுவனத்தின் அதிகாரிகளினால் இதன்போது கௌரவ பிரதமருக்கு நினைவு பரிசொன்று வழங்கப்பட்டதுடன், கௌரவ பிரதமரினால் கொழும்பு டொக்யார்ட் கப்பல் கட்டும் நிறுவனத்தின் தலைவர் ஹிதெகி டனகாவுக்கு நினைவு பரிசொன்று வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன, கொழும்பு டொக்யார்ட் கப்பல் கட்டும் நிறுவனத்தின் தலைவர் ஹிதெகி டனகா, தலைமை நிர்வாக அதிகாரி D.V.அபேசிங்க, தலைமை செயற்பாட்டு அதிகாரி K.B.P.பெர்னாண்டோ, பொது முகாமையாளர் S.G.சேனாதீர, சுற்றுச்சூழல் அதிகாரி சுபுன் S. பதிரகே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.