யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் குடும்பத் தலைவரை வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில், அவரின் மனைவி, மாமனார் (மனைவியின் தந்தை) உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் மத்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் (கராஜ்) நடத்தி வந்த ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் என்பவர் கடந்த 21 ஆம் திகதி இரவு தனது கராஜில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று அவரை வழிமறித்து தாக்கியுள்ளது.
தாக்குதலாளிகளிடம் இருந்து அவர் தப்பியோடிய போது, அவரை வீடு வரை துரத்தி சென்று, வீட்டு வாசலில் வைத்து மூர்க்கத்தனமாக வெட்டி படுகொலை செய்த பின்னர் அங்கிருந்து தப்பி சென்று இருந்தனர்.
குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரினால், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கொலையான நபரின் குடும்பத்தில் முரண்பாடுகள் நிலவி வந்ததாகவும், அதனால் அவர் குடும்பத்தை விட்டு பிரிந்து தனது வாகன திருத்தகத்தில் (கராஜ்) தங்கி இருந்துள்ளார் எனவும் தெரிய வந்திருந்தது.
அதன் அடிப்படையில் தாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போது, கொலையானவரின் மனைவியும், மாமனாருமாக இணைந்து திட்டம் தீட்டி வேறு நபர்கள் மூலம் குறித்த நபரை படுகொலை செய்துள்ளனர் என கண்டறிந்த நிலையில் , மனைவி, மனைவியின் தந்தை உள்ளிட்ட 11 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 11 பேரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.