நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக களுகங்கையின் குடா ஓயா நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் படி புளத்சிங்கள, மதுராவளை மற்றும் பாலிந்த கண்டி பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாகத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தனகலு ஓயாவின் நீர்மட்டமும் உயர்ந்து காணப்படுவதால் திவுலப்பிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜாஎல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், நிலவும் மழையுடனான காலநிலையினால் 08 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது .
நாட்டில் சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனையடுத்து, பலத்த மழை வீழ்ச்சிக்கான சிவப்பு அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை (20) காலை 8.30 மணி முதல் இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை 8.00 மணி வரையான காலப்பகுதியில் களுத்துறை மாவட்டத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர பகுதியில் 107 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.