நாட்டின் வைத்தியசாலைகளில் இருந்து தொற்றும் கழிவுகளை அகற்றும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமையால், கொடிய நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக, சுகாதார ஊழியர்களின் முன்னணி சங்கம் எச்சரித்துள்ளது.
“தொற்றுக் கழிவுகள் குவிந்து, அந்த கழிவுகளை முறையாக அகற்றாததால், ஒட்டுண்ணி தொற்று, நுரையீரல் தொற்று, பக்டீரியா மூளைக்காய்ச்சல், எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி, பூஞ்சை தொற்று மற்றும் பக்டீரியா (இரத்த ஓட்டத்தில் பக்டீரியா) உள்ளிட்ட தேவையற்ற பிரச்சினைகளுக்க முகங்கொடுக்க நேரிடலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
100 ரூபாய் பணம் போதாது
நோயாளர்களிடமிருந்து தொற்றுக்குள்ளான கழிவுகளை அகற்றும் பணி தனியார் துறை நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு கிலோகிராம் தொற்று கழிவுகளை அகற்றுவதற்கு 100 ரூபாய் பணம் போதாது எனவும் சுகாதார நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இந்தத் தொகை 2017ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது, அப்போது ஒரு லீட்டர் டீசலை 85 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள முடியும். மின்சாரம், தண்ணீர் போன்ற அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒப்புக்கொண்ட விலையை அரசாங்கம் உயர்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.”
குறிப்பாக, கழிவுகளை அகற்ற தேவையான டீசல் விநியோகம் கிடைக்காததாலும், நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையாலும், கடந்த வாரம் பல வைத்தியசாலைகளில் நோய்த்தொற்று கழிவுகள் குவிந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலைமைக்கு, தீர்வு வழங்கப்படாததாலும், கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் முற்றாக தனியார் மயமாக்கப்பட்டதாலும் வைத்தியசாலை மட்டத்தில் கழிவுகளை குவிப்பதைத் தவிர வேறு எந்த மாற்று வழியையும் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நிபுணர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் கூறினார்.